மீரட்: உத்திரப் பிரதேசத்தின் மீரட் பகுதியைச் சேர்ந்த ஒரு பாரதீய ஜனதா கவுன்சிலர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

அந்த கவுன்சிலரின் பெயர் சதீஷ் சந்திரா. காலி மனை ஒன்றில் தூக்கிட்டு தொங்கிய அவரிடமிருந்து 4 பக்க அளவிலான ஒரு தற்கொலை கடிதமும் கைப்பற்றப்பட்டது.

காவல்துறையினர் அதுசார்ந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தற்கொலை கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என முழுமையாக தெரியவில்லை என்றாலும், மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் தன்னை இந்த மோசமான முடிவுக்கு தள்ளியதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

முழுமையான விசாரணை முடிந்த பிறகே உண்மைகள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்த கவுன்சிலருக்கு ஒரு மனைவியும், மகளும் உள்ளனர்.