மும்பை: சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் ஊழியருக்கு, அவரின் சக பணியாளர்கள், பல மாதங்களாக தொடர்ந்த பண உதவிகளை செய்து வந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்ட ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சைலேஷ் குமார் சிங். 54 வயதான இவர், அந்நிறுவனத்தில் சீனியர் டெக்னீஷியன் அந்தஸ்தில் பணியாற்றி வந்தார். இவர் வயிற்றுப் புற்றுநோயால் அவதிப்பட்டும் வந்தார்.
பொருளாதார இக்கட்டில் மாட்டித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இவர் தனக்கான பணிவாய்ப்பை இழந்த பின்னர், இவருக்கு கடந்த பல மாதங்களாக, இவரின் முன்னாள் சக பணியாளர்கள் நிதி திரட்டி, மாதாமாதம் பணம் அனுப்பி வந்தனர்.
ஆனால், அப்படி பணம் அனுப்பியவர்களின் நிலையும் கடந்த சில மாதங்களாக மோசமாகிவிட (அவர்களுக்கும் ஊதியம் நின்றுபோனதால்), அவர்களால் பணம் அனுப்ப முடியாமல் போய்விட்டது.
இந்த சூழலில்தான், தன் வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் சைலேஷ்குமார். அவரின் மரணத்திற்கு, நோய் என்பதைத் தவிர்த்து, பணச் சிக்கலும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.