சென்னை
மோடியின் அரசு பழைய வரலாற்றை திருப்புவதாக நெட்டிசன் கதிர்வேல் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
பிரபல முகநூல் பதிவர் கதிர்வேல் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவின் விவரம் வருமாறு :
வரலாறு திரும்புகிறதா?
——————————————-
பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் 1971 தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ரே பரேலி தொகுதியில் அவரும் வெற்றி பெற்றார்.
தோல்வி அடைந்த வேட்பாளர் வழக்கு போட்டார்.
”யஷ்பால் கபூர் என்ற அரசு அதிகாரியை இந்திரா தனது பிரசார நிர்வாகியாக நியமித்தார். அந்த அதிகாரி சொன்னதால், இந்திராவின் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் உதவி செய்தனர். போலீஸ் பாதுகாப்பும் இந்திராவுக்கு கிடைத்தது. இது தேர்தல் சட்டத்தின் 123(7)(ஏ) விதியை மீறிய குற்றம். ஆகவே, இந்திரா வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்பது தோற்றவரின் வாதம்.
உண்மையில், யஷ்பால் கபூர் அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டுதான், இந்திராவின் பிரசார நிர்வாகியாக பொறுப்பு ஏற்றார். ஆனால், அரசு நிர்வாக நடைமுறையின் வழக்கமான மெத்தனத்தால், அவரது ராஜினாமாவை ஏற்று விடுவிப்பு ஆணை பிறப்பிக்க சற்று தாமதம் ஆனது.
அலகாபாத் ஐகோர்ட் 1975 ஜூன் 12 ல் தீர்ப்பு வழங்கியது.
“பிரதமராக இருந்தாலும், தேர்தலில் இந்திரா ஒரு வேட்பாளர், அவ்வளவுதான். தனது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக அரசு வசதிகளையோ அதிகாரிகளையோ பயன்படுத்திக் கொள்ள அவருக்கு உரிமை கிடையாது. இந்த விதியை அவர் மீறியது நிரூபணம் ஆனதால், இந்திராவின் வெற்றி செல்லாது” என்பது தீர்ப்பு.
இந்திரா அப்பீல் செய்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அவர் ராஜினாமா செய்யக் கோரி பெரும் கலவரம் நடத்தின. அவர் எமர்ஜென்சி பிரகடனம் செய்தார். மற்றதெல்லாம் தெரிந்த வரலாறு.
இப்போது இதை ஞாபக படுத்த என்ன காரணம்?
பிரதமர் மோடி எங்கெல்லாம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாரோ, அந்த ஊர், அதன் மக்கள், வரலாறு, கோயில்கள், பிரச்னைகள், பெருமைகள், மண்ணின் மைந்தர்கள், சாதனையாளர்கள், பொருளாதாரம், விவசாயம், சுற்றுலா, ஏனைய சிறப்புகள் ஆகியவற்றை சேகரித்து தொகுப்பாக அனுப்புமாறு நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகம் ஆணையிட்டுள்ள தகவல் இன்று அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
ஏப்ரல் 11 ல் முதல் கட்ட ஓட்டு பதிவு நடக்கும் நிலையில், 8 ம் தேதி அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. “பிரதமர் அலுவலகம் கேட்பதால், மறுநாள் பிற்பகல் 2 மணிக்குள் தகவல்களை அனுப்ப தவறாதீர்கள்” என்று கேட்டிருப்பவர் நிடி ஆயோக்கின் எக்கனாமிக் ஆபீசர் பிங்கி கபூர். (யஷ்பால் கபூர் மறுபிறவி?)
இந்த தகவல்கள் அனைத்தையும் சேகரித்து, தொகுத்து அனுப்ப அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் அரை நாள் மட்டும்.
மாடல் கோட் ஆப் காண்டக்ட் என்கிற தேர்தல் நடத்தை விதிகள் மீறலை தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஆணையமே மோடி அரசின் ஓர் அங்கமாக செயல்படுவதால், பிரதமரின் அப்பட்டமான விதி மீறல்கள் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. காங்கிரஸ் இன்று இது விஷயமாக சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டியிருக்கிறது.
எனினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123(7)(ஏ) விதி மீறப்படுவது குறித்த விவகாரத்தை கோர்ட் விசாரித்து தீர்ப்பு சொல்ல ஆணையத்தின் தயவு அவசியம் இல்லை.