ராவல்பிண்டி

பாகிஸ்தான் அரசு சுமார் 30000 மதரசாக்களை முறையான கல்வி திட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ள்து.

இலாமிய நாடான பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுக்கு பெரிதும் உதவி வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. பாகிஸ்தான் அதை மறுத்து வருகிறது. அத்துடன் அந்த அவப்பெயரை நீக்க தேவையான முயற்சிகள் செய்து வருகிறது. தீவிரவாத ஆதரவு காரணமாக பல உலக நிதி நிறுவனங்கள் அந்நாட்டுக்கு நிதி உதவி மற்றும் கடன் வழங்க தயங்குவதால் நாட்டின் நிதி நிலைமை மிகவும் சீர் கெட்டுள்ள்து.

இஸ்லாமிய கல்வி நிலையங்களான மதரஸாக்கள் தீவிரவாதத்தை வளர்க்க துணை புரிவதாக புகார்கள் எழுகின்றன. பாகிஸ்தானில் சமீபத்தில் பல தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. இந்த இயக்கங்கள் 182 மதரசாக்களை நடத்தி வந்தன. அந்த மதரசாக்கள் அரசு நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டன. அப்போது அரசின் பாதுகாப்புத் துறை மதரசாக்கள் பற்றி ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் பல மதரசாக்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தீவிரவாதிகள் வசம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மதரசாக்களில் மத வேற்றுமை மற்றும் வெறுப்பு மனப்பான்மையை மாண்வர்கள் இடையில் வளர்த்து வருவதை பற்றி அறியப்பட்டது. அதே நேரத்தில் பல ஏழை மாணவர்களுக்கு மதரசாக்கள் கல்வி அளித்து வந்ததால் இவைகளை மூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஒட்டி மதரசாக்களை முறையான கல்வி திட்டத்தின் கீழ் கொண்டு வந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை நேற்று ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார். அவர், “நாடெங்கும் உள்ள 30000 மதரசாக்கள் முறையான கல்வி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அரசே அவைகளை நடத்த உள்ளது. இஸ்லாமியக் கல்வி உடன் முறையான கல்வியும் மதரசாக்களில் இனி பயிற்றுவிக்கபடும்.

இதன் மூலம் மாணவர்களிடையே பரப்பப் படும் வெறுப்பு மனப்பானமை, மதவெறி ஆகியவை நிறுத்தப்படும். அது மட்டுமின்றி இங்கு பயிலும் மாணவர்களுக்கு மற்ற தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைப் போல் பணிகள் கிடைக்க நிறைய வாய்ப்புக்கள் உருவாகும். தீவிரவாதத்தை குழந்தை பருவத்தில் இருந்தே ஒழிக்க அரசு செய்யும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.” என தெரிவித்தார்.