சென்னை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. சென்னையில் நீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. சுமார் 900 அடி வரை தோண்டினால்தான் தண்ணீர் கிடைக் கும் அவலம் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகர மக்கள் தண்ணீருக்காக அலையும் நிலை எழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால் மக்களின் குடிநீரும் காணல் நீராக மாறும் அபாயம் வெகுதூரத்தில் இல்லை.
தற்போது தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல இடங்களில் குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. லாரிகளில் குடம் தண்ணீர் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குடிதண்ணீர் கேன்கள் ரூ.30 வரை விற்பனையாகி மாநகர மக்கள் அல்லல்படுத்தி வருகிறது. மாநகரத்தில் எங்கு நோக்கிலும் வீடுகளின் முன்பு போர் போடப்படும் நிகழ்வுகள் தென்டுவதை நாம் காணலாம்.
முன்பு சென்னையில் சுமார் 40அடியில் காணப்பட்ட நிலத்தடி நீர் மட்டம், இன்று குறைந்த பட்சம் 150 அடி முதல் 900 அடி வரை சென்றுவிட்டது. நிலத்தடி நீரை எடுக்க ஆழ்துளை போர் போடப்பட வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது. அந்தளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்துகொண்டே வருகிறது.
நிலத்தடி நீர் பற்றாக்குறை மாநகர மக்களை கதிகலங்க வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொய்த்து வரும் பருவ மழையின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் என்றில்லாமல் சென்னை சுற்று வட்டார பகுதிகளிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதே பல ஏரிகளில் நீர் இல்லாத நிலையில், இனி வரும் மாதங்களில் தண்ணீர் பற்றாக் குறையை தமிழகம் எப்படி சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாகி வருகிறது. தமிழக அரசு சென்னை மக்களின் தண்ணீர் தேவையை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது பல மில்லியன் டாலர்கள் கேள்வி….
தற்போது சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், மறைமலைநகர் அதுபோல ஆவடியை அடுத்த புறநகர்கள் பகுதிகளிலும் நிலத்தடி நீர் எங்கேயோ சென்றுள்ளது. சுமார் 500 அடி முதல் 1000 அடி வரை தண்ணீருக்காக போர் போட வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாக ஆழ்துளை போர் போடும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுபோல தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர் போன்ற பகுதிகளிலும் சுமார் நீர் மட்டம் சுமார் 800 அடி ஆழம் வரை கீழிறங்கியிருப்பதாகவும், அம்பத்தூர், ஆவடி 600 முதல் 700 அடி, சதுப்புநில ஏரி இருந்த வேளச்சேரியிலும் சுமார் 600 அடி ஆழம் வரை தண்ணீருக்காக போர் போட வேண்டிய சூழல் நிலவுவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சென்னை சிட்டியின் மையப்பகுதிகளிலும் சுமார் 200 அடி முதல் இடத்திற்கு தகுந்தவாறு 500 அடி வரை நிலத்தடி நீர் சென்றுவிட்டதாக, ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைய காரணம் என்ன?
கடந்த சில ஆண்டுகளாக சென்னையின் பெரும்பாலானதெருக்கள், உள்வட்ட சாலைப்பகுதிகளில் சிமென்ட் சாலைகள் போடப்பட்டு வருகிறது. அதுபோல மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் உள்பட, பக்கிங்காம் கால்வாய், கூவம் போன்ற கால்வாய்களின் நாலாபுறமும் அடிப்பகுதி உள்பட சிமென்ட் தளம் போடப்படுவதால், மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாமல் நிலை ஏற்பட்டு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியாத நிலையில், வீணாக கடலுக்கு செல்கிறது.
சாலையோரங்களில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு கால்வாய்களும் சரிவர நிறை வேற்றப்படுவதில்லை. சாலையோரங்களில் பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டு வரும் பகுதிகளி லும் மழைநீர் பூமிக்குள் செல்ல எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது இல்லை. இதை அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை.
பெரும்பாலான வீடுகள், வணிக நிறுவனங்களிலும் மழைநீர் சேகரிப்பு சரிவர பின்பற்றப் படுவதில்லை. இதுகுறித்து தமிழக அரசும் கண்மூடி வேடிக்கை பார்த்து வருகிறது. இதுபோன்ற காரணங்களினாலேயே மழை நீர் பூமிக்குள் செல்வது தடைபட்டு வருவதால், நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக நிலத்தடி நீர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருபுறம் பெருகி வரும் கணக்கிலடங்கா அடுக்குமாடி வீடுகள் நிலத்தடி நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வருகின்றன.
மற்றொரு புறம் சென்னையில் இருந்த சிறு குளங்கள், குட்டைகள், விளை நிலங்கள் அனைத்தும் வீடுகளாக மாறிவிட்டது. இதன் காரணமாக மழைநீர் சேமிக்கப்படுவது மனித சக்திகளால் தடுக்கப்பட்டு விட்டது. மழைநீர் சேமிக்க வழியின்றி சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் 900 அடி ஆழம் வரை சென்று கொண்டே இருக்கிறது…
இதே நிலை நீடித்தால், இன்னும் ஒருசில ஆண்டுகளில் மக்கள் தண்ணீருக்காக நாயாய் அலைய வேண்டிய சூழல் உருவாகும் என்பது மறுப்பதிற்கில்லை குடி தண்ணீரும் நமக்கு காணல் நீராக மாறிவிடும் அவலமும் ஏற்பட்டு விடும்….
இனிமேலாவது விழித்துக் கொள்வோம்… மழை நீரை சேமிப்போம்…நீர் மேலாண்மையை பாதுகாப்போம்…