அசன்சோல், மேற்கு வங்கம்
மேற்கு வங்கம் அசன்சோல் தொகுதியில் அத்து மீறி வாக்குச் சாவடிக்குள் நுழைந்த பாஜக வேட்பாளர் பாபுல் சுப்ரியோ மீது வழக்கு பதிய காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இன்று நடந்த நான்காம் கட்ட வாக்குப்பதிவில் மேற்கு வங்க மாநில அசன்சோல் தொகுதியும் இடம் பெற்றுள்ளது. இங்கு திருணாமுல் காங்கிரஸ் சார்பில் மூன் மூன் சென் மற்றும் பாஜக சார்பில் பாபுல் சுப்ரியோ ஆகியோர் போட்டி இடுகின்றனர். இரு கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இன்று அசன்சோல் தொகுதியில் பாபுல் சுப்ரியோ தனது காரை நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாபுல் சுப்ரியோவின் கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர் வாக்குச் சாவடிக்குள் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து மத்திய பாதுகாப்பு படையை தாம் அழைத்து வர உள்ளதாகவும் மக்கள் பயமின்றி பாஜகவுக்கு வாக்களிக்கலாம் எனவும் கூறியதாக சொல்லப்படுகிறது.
வாக்குப் பதிவு நடைபெறும் போது அவர் வாக்குச் சாவடிக்குள் நுழைந்து வாக்குப் பதிவில் குறிக்கிடுவதாக தேர்தல் ஆணையம் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளது. அத்துடன் இது குறித்து அவர் மீது வழக்கு பதிய வேண்டும் எஅன்வும் காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.