ராசிபுரம்:

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம். வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் நாளுக்கு நாள் பல் தகவல்கள் வெளியாகி வருகிறது. சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விவ காரத்தில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், பல கோடி ரூபாய் விளையாடி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

விருப்ப ஓய்வுபெற்ற அமுதா என்ற செவிலியரின் ஆடியோ வெளியானதை தொடர்ந்து இந்த விவகாரமாக பூதாகரமாக வெடித்துள்ளது. இதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் பல்வேறு அதிரடி தகவல்கள் வெளியாகி வருகிறது.  சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததாக ஓய்வுபெற்ற நர்சு அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், இடைத்தரகர் அருள்சாமி, ஈரோடு அசீனா உள்பட 6 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்த நிலையில, மேலும் 2 இடைத்தரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வங்கி அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவ மனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தோண்ட தோண்ட அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஏராளமான புகார்களும் குவிந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து, ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி  டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்கப்பட்டிருக்கலாம் என்று புகார்கள் எழுந்துள்ளதை தொடர்ந்து சிபிசிஐடி  நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.