டில்லி
காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இதில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த இயக்க தலைவன் மசூத் அசார் கொல்லப்ப்டடதாக விமானப்படை அறிவித்தது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாமுகமது இதை மறுத்தார். மசூத் அசார் உடல் நலக் குறைவால் வெளியில் வர முடியாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கு மசூத் அசார் சார்பில் தாம் 17 வருடங்களாக எந்த மருத்துவரையும் சந்திக்க வேண்டிய நிலையில் இல்லாத அளவுக்கு நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் காஷ்மீரில் மற்றொரு தாக்குதலை நடத்த உள்ளதாக உளவுத்துறை மத்திய அரசை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ள்ன. இந்த தாக்குதலை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து மசூத் அசார் பாகிஸ்தானில் உள்ள பகவல்பூரில் தனது இயக்க தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் இந்த தாக்குதலுக்காக பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை அவன் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மசூத் அசார் தாக்குதல் தொடர்பான உத்தரவுகளை அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.