செராம்பூர், மேற்கு வங்கம்
திருணாமுல் காங்கிரஸின் 40 சட்டப்பேரவை உறுப்பினர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடந்துக் கொண்டு உள்ளது. இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன. பதிவான வாக்குகள் வரும் மே மாதம் 23 அன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மீதமுள்ள மூன்று கட்ட வாக்குப் பதிவுகளுக்கான தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடு பட்டு வருகின்றன. பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினர்.
அவர் தனது உரையில், “வரும் மே மாதம் 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரும். அப்போது நாடெங்கும் தாமரை மலர்ந்துள்ளது தெரிய வரும். மேற்கு வங்க மாநில திருணாமுல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர்கள் அங்கிருந்து விலகுவார்கள்” என தெரிவித்துள்ளார்.