வாரணாசி:

விவசாயிகளை வஞ்சித்து வரும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகள்  களமிறங்கி உள்ளனர். அவர்கள் மோடி போட்டியிடும்  வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதுபோல தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் 95 பேர் வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட குவிந்துள்ளனர்.

மோடி தலைமையிலான அரசு விவசாயிகளை வஞ்சித்து வந்த நிலையில்,  தமிழக விவசாயிகள் சுமார் 100நாட்கள் டில்லியில் போராட்டம் நடத்தினர். ஆனால், இறுதிவரை மோடி, விவசாயிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தார். இதையடுத்து, மோடிக்கு எதிராக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு  உள்பட 111 விவசாயிகள் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடப்போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து, தமிழக அமைச்சர் தங்கமணி அய்யாகண்ணுவை டில்லி அழைத்துச் சென்று பாஜக தலைவர் அமித்ஷா மற்றும்  பியூஸ் கோயலை சந்தித்தார்.. இந்த சந்திப்பின்போது விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் படும் என பாஜக உறுதி அளித்ததாக கூறிய அய்யாக்கண்ணு, வாரணாசியில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். அய்யாக்கண்ணுவின் திடீர் பல்டி விவசாயிகள்  மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியகத்தினர், மோடியை எதிர்த்து களமிறங்கு வதாக அறிவித்தனர். அதைத்தொடர்ந்து  ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் இதற்காக வாரணாசிக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள்,  மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், அவர் மீண்டும் பிரதமரானால் நாடு மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து என்ற அடிப்படை கருத்தை வலியுறுத்தி,  மோடியை  எதிர்த்து போட்டியிடுவதாக கூறியுள்ளனர்.

இதற்கிடையில்,  வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் விவசாயிகளை, உள்ளூர் போலீஸார் மிரட்டுவதாகவும், இங்கு உங்களுக்கு என்ன வேலை என்று கேள்வி கேட்டு வாரணாசி காவல்துறையினர்  தங்களை மிரட்டுவதாகதாகவும்  தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் தெலுங்கானாவை சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய் குவிந்துள்ளனர். இதுகுறித்து கூறிய, மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் நரசிம்ம நாயுடு,  நாங்கள் வாரணாசி மக்களிடம் வாக்குகளை கேட்க மாட்டோம்,  தங்களுக்கு அரசியல் குறிக்கோள் அல்ல என்று தெளிவுபடுத்தியவர்,  விவசாயிகளின் நிலைமை கவனத்தில் கொண்டு வரவே வாரணாசியில் போட்டியிடுகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், 95 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் குறைந்தது 35 பேராவது போட்டியிடுவோம் என்று தெரிவித்து உள்ளார்.