சென்னை:

னக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை; தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்று தங்க மங்கை கோமதி மாரிமுத்து கூறியிருந்த நிலையில்,தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் கோமதிக்கு உதவ முடியவில்லை என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து தங்கப் பதங்கத்தை வென்றார். சர்வதேச அளவில், கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கோமதி மாரிமுத்துவுக்கு  திமுக சார்பாக ரூ.10 லட்சமும், டிடிவி தினகரனின் அமமுக சார்பாக ரூ. 10 லட்சமும்,  தமிழக காங்கிரஸ் சார்பாக ரூ.5 லட்சமும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரோபோ ஷங்கர் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்த நிலையில், தனியார் அமைப்பின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கோமதி மாரிமுத்து, ‘நம் தமிழ்நாட்டில், விளையாட்டில் ஆர்வம் உள்ள என்னைப் போன்ற நிறைய பேர் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் தங்கும் விடுதிகளில் போதுமான உணவு கிடைப்பதில்லை. அவர்களுக்கு ஏற்ற, சத்தான உணவுகளை அரசு கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டு சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹீமா தாஸுக்கு அம்மாநில அரசாங்கம் உதவிகள் செய்தன. அதேபோன்று, தமிழக அரசும் உறுதுணையாக இருந்தால், தமிழ்நாட்டு வீரர்களும் உலக அளவில் சாதனை படைப்பார்கள்.

நான் வெற்றி பெற்ற பின்னர், தமிழக அரசு சார்பாக என்னிடம் பேசப்பட்டது. எனக்கு உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதல்வர் எங்கள் வீட்டுக்குக் கடிதம் அனுப்பியிருப்பதாக அம்மா சொன்னார். அம்மாவுக்குப் படிக்கத் தெரியாது. அது என்னவென்று நான் ஊருக்குச் சென்று படித்துப் பார்த்தால் தான் தெரியும். தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்று குறை கூறியிருந்தார்.

இதுதொடர்பாக தமிழக அமைச்சர் ஜெயக்குமாரின் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், அவரை வரவேற்க முடியவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

கோமதியை ஊக்குவிக்க தமிழக அரசு தவறி விட்டதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று மறுத்தவர், இப்போது  தேர்தல் நடத்தை குறியீடு உள்ளது. அந்த நேரத்தில், தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாமல், (ஆதரவு) அவருக்கு ஆதரவு கொடுக்க முடியாது. எனவே தேர்தல் கமிஷனுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். எங்களுக்கு அனுமதி கிடைத்தால், அனைத்து உதவிகளையும் மகிழ்ச்சியுடன் வழங்கும்படி முதல்வர் தயாராக இருக்கிறார். தேர்தல் ஆணையம் அனுமதி பெற்ற பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதும் தடகள வீராங்கனை கோமதி விரும்புகிற அளவுக்கு அவருக்கு உதவி செய்ய அம்மாவின் அரசு தயாராக இருக்கிறது என்றார்.

விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைகளில்  மூன்று சதவிகித இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் நினைவு கூர்ந்தார்.