மும்பை: பிரதமர் மோடியின் தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறல்களை தடுக்கவோ அல்லது கேள்வி கேட்கவோ தேர்தல் கமிஷன் தயங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் தேர்தல் பேரணிகளுக்கான செலவு ரூ.10 கோடிகளை நிச்சயம் தாண்டியிருக்கும். ஆனால், இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் எதையும் கண்டுகொள்வதில்லை.
அதேபோன்று பிரதமர் தனது கூட்டங்களில் மேற்கொள்ளும் சர்ச்சைக்குரிய மற்றும் சமூகத்தில் பிரச்சினைகளை உண்டாக்கும் வகையிலான உரைகள் குறித்தும் தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை. குறைந்தபட்சம் எச்சரிக்கைக் கூட விடுப்பதில்லை.
தேர்தல் கமிஷன் பிரதமரின் விஷயத்தில் தயக்கம் காட்டுகிறது அல்லது கண்டிக்க விருப்பமின்றி நடந்து கொள்கிறது” என்றார்.
மராட்டிய மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அசோக் சவான், “மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, மாம்பழப் பெட்டிகள் என்ற போர்வையில், பணப் பெட்டிகளை எடுத்துச் செல்வதாகவும், ஆனால், இதுகுறித்து தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.