டில்லி:

மிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வந்த ஃபானி புயல், தற்போது ஒடிசாவை நோக்கி திரும்புவதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும்  ஆந்திராவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், ஃபானி புயல் வடமேற்கு பகுதியில் இருந்து தற்போது வடகிழக்கு நோக்கி திரும்பி உள்ளதால், தமிழகத்தில் 30ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஃபானி வரும் 1ந்தேதி ஒடிசா கடற்கரையில் கரையை கடக்கக்கூடும் என்பதால், அங்கு கடும் மழை மற்றும் நிலச்சரிவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் கூறியதாவத,

ஃபானி புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 880 கி.மீ. தொலைவிலும், திரிகோண மலைக்கு 620 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு 1050 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

அதன் பிறகு திசை மாறி . மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் நகரும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயல் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

மேலும்,  இந்த புயல் வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய பகுதியில் நெருங்கி வரும் வேளையில் வடதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் புயல் திசை மாறி செல்லக்கூடிய நிலை உள்ளதால் வடக்கு, வடமேற்கு திசை காற்று வீசி, தமிழகத்தில் வெப்ப நிலை உயரலாம் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில்  வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.