
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்க நிறவெறி ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கொண்டாடப்பட்ட விழாவில், கருப்பின மக்களுக்கான அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட பிற கலப்பினத்தவர்களின் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக, தென்னாப்ரிக்காவில் வாழும் பெரும்பான்மை கருப்பின மக்கள், வெள்ளை நிறவெறிக்கு எதிரான தங்களின் நெடிய போராட்டத்தில் வெற்றியைப் பெற்றனர்.
அதனடிப்படையில், அவர்கள் தங்களுக்கான வாக்குரிமையைப் பெற்று, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிய கருப்பர் இன சுதந்திரப் போராட்ட தலைவரான நெல்சன் மண்டேலா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது பலரும் அறிந்த வரலாறு.
ஜோகன்னஸ்பர்க் நகரின் புறநகர் பகுதியில் ஆட்டம் பாட்டத்துடன் நடந்த விழாவில் 3500 பேர் கலந்துகொண்டனர்.
ஆனால், நிறவெறிக்கு எதிராக விடுதலைப் பெற்று 25 ஆண்டுகளை கடந்த பிறகும், பெரும்பாலான கருப்பின மக்களுக்கு இன்னும் சரியான வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை மற்றும் அவர்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளே பிரச்சினைகளாக இருப்பது உள்ளிட்ட புகார்களும் பரவலாக உள்ளன. இதுதான் சுதந்திரமா? என்ற குரல்களும் கேட்கின்றன.
மேலும், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட இதர கலப்பினத்தோர்களுக்கு எதிரான பாகுபாடுகளும், பல பொது இடங்களில் இன்றும் நிலவுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
– மதுரை மாயாண்டி