கல்முனை, இலங்கை

இலங்கை ராணுவத்தினர் ஒரு வீட்ட சுற்றி வளைத்ததால் அங்கிருந்தவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்ததில் 9 தீவிரவாதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம் அடைந்தனர்.

மாதிரி புகைப்படம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பால் சுமார் 250க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். மேலும் 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். மரணம் அடைந்தவர்களில் 36 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களை குறி வைத்து நடந்த இந்த தாக்குதலுக்கு ஐ எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இலங்கை நாட்டில் உள்ள தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் மூலம் ஐஎஸ் இயக்கம் இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை பாதுகாப்புப் படையினர் இந்த இயக்கங்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டு பிடிக்க சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  ஒரு ஓட்டலில் நடந்த மனித குண்டு தாக்குதலில் இந்த தாக்குதலை முன்னின்று நடத்தியதாக சொல்லப்படும் ஜகரன் ஹாசிம் என்னும் தவ்ஜீத் ஜமாத் தலைவன் மரணம் அடைந்தான்.

இலங்கையில் ஐஎஸ் இயக்க தொடர்புடைய 140 பேர் இலங்கையில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் உள்ள தீவிரவாதிகளை கைது செய்ய இலங்கை பாதுகாப்புப் படை தீவிர சோதனையில் இறங்கி உள்ளது. இந்த சோதனை இலங்கை முழுவதும் நடைபெற்று வருகிறது.

கொழும்புவில் இருந்து சுமார் 360 கீமீ தொலைவில் உள்ள கல்முனை பகுதியில் உள்ள சாய்ந்த மருது என்னும் இடத்தில் குடும்பத்துடன் வெளியூர் வாசிகள் தங்கி இருந்துள்ளனர். இவர்கள் நடவடிக்கை சந்தேகத்துக்கு வகையில் உள்ளதாக வந்த புகாரை அடுத்து பாதுகாப்புப் படையினர் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு இந்த வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் அதே ஊரை சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண் மரணம் அடைந்தார்.

இலங்கை பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதால் வீட்டில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். இவ்வாறு மூன்று முறை அங்கு வெடிகள் வெடிக்கப்பட்டுள்ளன. அந்த வீட்டில் தங்கி இருந்த 6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் என 16 பேர் மரணம் அடைந்தனர். அதில் குழந்தைகளை தவிர மற்றவர்கள் தீவிரவாத இயக்கத்தில் நேரடி தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.

அந்த வீட்டை சோதனை இடும் போது ஏராளமான துப்பாக்கிகள், வெடிகுண்டு குவியல்கள், தற்கொலை தாக்குதல் நடத்த பயன்படுத்த படும் பொருட்கள், ராணுவ சீருடைகள், ஐஎஸ் இயக்க கொடிகள் ஆகியவை கிடைத்துள்ளன. கல்முனை மாவட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல் கடுமையாக்கப் பட்டுள்ளது.