சென்னை

ரும் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக உள்ளதால் மக்கள் மிகவும் துயருற்று வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் கடுமையான வெயில் உள்ளது. வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகர மக்கள் மழையை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

சென்னை வானிலை ஆய்வு மைய் இயக்குனர் எஸ் பாலசந்திரன், “இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதியிலும் அதை ஒட்டிய வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியிலும் நேற்று உருவான காற்றழுத்த பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகி உள்ளது.   இன்று அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் சனிக்கிழமை மேலும் வலுவடைந்து புயலாக மாறி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதன் அருகில் உள்ள இந்திய பெருங்கடலில் மையம் கொள்ள வாய்ப்புள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகரும் போது தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 30 ஆம் தேதியும் மே 1 ஆம் தேதியும் கடும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை மையம், “தமிழகத்தில் வரும் 30 மற்றும் மே 1 ஆம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த இரு தினங்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கடலோரப் பகுதிகளில் 120 மிமீ லிருந்து 200 மிமீ வரையிலான மிக பலத்த மழை அல்லது 200 மிமீக்கு மேல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்” என எச்சரித்துள்ளது.