மும்பை

னது புற்று நோய் உள்ளதாக சாத்வி பிரக்ஞா தாகுர் தெரிவித்ததை மும்பை ஜே ஜே மருத்துவமனை மறுத்துள்ளது.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 8 வருடங்கள் சிறையில் இருந்த சாத்வி பிரக்ஞா தாகுர் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். அவரை போபால் மக்களவை தொகுதியின் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.  சாத்வி பிரக்ஞா தாகுர் தொடர்ந்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைகளை உண்டாக்கி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னை மாலேகான் வழக்கில் கைது செய்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேவுக்கு தாம் சாபம் அளித்ததாகவும் அதனால் அவர் மும்பையில் நடந்த 26/11 தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லபட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு எழுந்ததால் மன்னிப்பு கோரினார்.

அடுத்ததாக அவர் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என ஒரு வழக்கு தொடரபபட்டது. அந்த வழக்கில் அவர் தேர்தலில் போட்டியிடலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அவரை ஜாமினில் விட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சாத்வி பிரக்ஞா தாகுர் சமீபத்தில் தனக்கு மார்பகப் புற்று நோய் இருந்ததால் ஜாமினில் வந்ததாகவும் அதை பசுவின் சிறுநீரான கோமியத்தால் செய்யப்படும் பஞ்சகவ்யம் என்பதை அருந்தி குணப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதற்கு பல மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்னும் நிரூபணம் ஆகாத ஒரு சிகிச்சை முறையை புற்று நோயாளிகள் இடையே சாத்வி பரப்புவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

மும்பையின் புகழ்பெற்ற மருத்துவமனையான ஜே ஜே மருத்துவமனையில் அவர் சிறைக் காவலில் இருந்தபோது புற்று நோய்க்கான பரிசோதனை நடந்துள்ளது. அப்போதைய மருத்துவமனை தலைவர் டி பி லகானே தனது மருத்துவ ஆய்வறிக்கையில், “பிரக்ஞாவுக்கு புற்று நோய்க்கான எவ்வித அறிகுறியும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர், “மார்பகப் புற்று நோய்க்கான சி ஏ 125 சோதனை சாதி பிரக்ஞாவுக்கு நடத்தப்பட்டது.  அந்த சோதனையில் அவருக்கு புற்று நோய் இல்லை என தெரிய வந்தது. அத்துடன் அவருடைய எம் ஆர் ஐ ஸ்கேன் மற்றும் ஈ சி ஜி சோதனை அறிக்கைகளிலும் அவருக்கு எவ்வித நோயும் இல்லை என்பது உறுதியானது” என தெரிவித்துள்ளார்.

தனக்கு இல்லாத ஒரு நோயைக் கூறி ஜாமீனில் வந்த சாத்வி பிரக்ஞா தாகுர் அதை குணப்படுத்த பஞ்சகவ்யம் சாப்பிடதாக கூறியதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.