டில்லி
தேர்தல் முடியும் வரை பிஎம் நரேந்திர மோடி என்னும் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
கடந்த 11 ஆம் தேதி பிஎம் நரேந்திர மோடி என்னும் திரைப்படம் வெளியாக இருந்தது. இந்த படம் பிரதமர் மோடியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்ப்டமாகும். இந்த திரைப்ப்படம் 23 மொழிகளில் இந்தியா முழுவதும் சென்ற 11 ஆம் தேதி வெளியாக இருந்தது.
இந்தபடத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பட வெளியீட்டை தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப் பட்டது. இந்த புகாரை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் தேர்தல் முடியும் வரை இப்படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிட்ட்து.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரின் அமர்வு விசாரணை செய்தது. இந்த அமர்வு தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த படத்தை முழுமையாக பார்த்து விட்டு தங்கள் இறுதி முடிவை தெரிவிக்குமாறு கூறியது.
கடந்த 18 ஆம் தேதி இந்த படத்தை பார்த்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் தங்கள் அறிக்கையை 22 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்துக்கு அளித்தனர். இந்த அறிக்கையில் இந்த படம் வெளியிட அனுமதித்தால் அது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக அமைய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இந்த படம் தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என தெரிவித்துள்ளது.