சென்னை

ந்தியாவில் இருந்து திருடப்பட்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் காட்சிப் பொருளகளாக உள்ள கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு அளிக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் இந்தியா ஒரு கலை பொக்கிஷங்கள் நிறைந்த நாடாக திகழ்ந்துள்ளது. இதற்கு இன்னும் பல அடையாளங்கள் தமிழகத்திலும் வட நாட்டின் பல இடங்களிலும் உள்ளன.  முக்கியமாக பல புத்த விகாரங்களில் ஏராளமான கலைப் பொருட்கள் இருந்துள்ளன.  அந்த பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டு மேலை நாடுகளின் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பொது நல மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இந்த விசாரணை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோரின் அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் ஜகன்நாத், “நாகப்பட்டினம் சூடாமணி விகாரம் என்னும் புத்தர்களின் கோவில்கள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்த அருங்கலைப் பொருட்கள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இது போல தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து கலைப் பொருட்கள் திருட்டு நடந்துள்ளன. திருடப்பட்ட இந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டு பெல்ஜியம் போன்ற நாடுகளில் பல தனியார் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கலைப் பொருட்களின் பட்டியல் அடங்கிய சோழர் கால செப்பு தகடுகள் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த காசிப தேரா விகாரத்தில் கிடைத்துள்ளன.

அது மட்டுமின்றி அந்த தகடுகளில் நாகப்பட்டினத்தில் சீன அரசருக்கு புத்த விகாரம் கட்ட அனுமதியுடன் பல்லவ அரசர் அளித்த கலைப் பொருட்கள் பட்டியலும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு சோழ அரசர்களான ராஜராஜன் மற்றும் சைலேந்திர மன்னன் மார விஜயோத்துங்க வர்மன் ஆகியோர் அளித்த பொருட்கள் குறித்தும் பதியப்பட்டுள்ளன

இது போல் மேலும் பல செப்புத் தகடுகள் நெதர்லாந்தில் உள்ள லேடன் பல்கலைக் கழகத்தில் இருப்பதாக பொன்னியின் செல்வன் புத்தகத்தில் அமரர் கல்கி குறிப்பிட்டுள்ளார். இந்த கலைப் பொக்கிஷங்களை வெளிநாட்டில் இருந்து மீட்டு நம் நாட்டுக்கு கொண்டு வர இந்திய அரசுக்கும் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்” என தனது வாதத்தில் தெரிவித்துள்ளார்

சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இது குறித்து பதில் அளிக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு நோட்டிஸ் அனுப்ப உள்ளது.