டோஹா: ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்த ஏமாற்றத்தை ஈடுசெய்யும் வகையில், கத்தார் ஆசிய தடகளப் போட்டியில், பெண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவின் அன்னு ராணி.
மேலும், இந்தியாவைச் சேர்ந்த அவினாஷ் சேபிள், 3000 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஈட்டி எறிதலில், அன்னு ராணி, 60.22 மீட்டர்கள் தூரம் எறிந்து, தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்துள்ளார். தங்கப் பதக்கம் பெற்ற சீனாவின் லியூ ஜூய்யூ எறிந்த தூரம் 65.83 மீட்டர்கள்.
அதேசமயம், இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான ஷர்மிளா குமாரி, 54.48 மீட்டர்கள் தூரம் எறிந்து, 7வது இடத்தைப் பெற்றார்.
தடை ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் தேசிய சாதனையாளர் அவினாஷ், பந்தய தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் 8 நிமிடங்கள் மற்றும் 30.19 விநாடிகள்.
– மதுரை மாயாண்டி