மும்பை

தேர்தல் மற்றும் அரசியல் செலவுகள் காரணமாக தற்போது வங்கிகளில் ரூ.70000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்போது தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் ஏராளமாக செலவு செய்து வருகின்றன. அத்துடன் பல கட்சிகளும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தேர்தல் நிதி பத்திரங்களை தேர்தல் செலவுகளுக்காக மாற்றி தங்கள் கணக்கில் ரொக்கமாக்கிக் கொள்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளால் வங்கிகளில் பணப்புழக்கம் மிகவும் குறைந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் இது போல் வங்கிகளில் பற்றாக்குறை ஏற்படுவது சகஜம் என்றாலும் தற்போது இது மிகவும் அதிகரித்துள்ளது. இந்த பற்றாக்குறை இந்த மாதம் 3 ஆம் தேதி ரூ.31,396 கோடியாக இருந்தது. கடந்த 16 ஆம் தேதி அது ரூ.70,226 கோடியாக ஆகி உள்ளது. இந்த பற்றாக்குறை இந்த மாத இறுதிக்குள் ஒரு லட்சம் கோடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கோடாக் மகிந்திரா வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் உபாசனா பரத்வாஜ், “இந்த பற்றாக்குறைக்கு அரசின் செலவுகளும் காரணமாகும். அரசின் இந்த எதிர்பாராத செலவுகளால் வங்கிகள் சரியான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை உண்டாகி இருக்கிறது. இந்த வங்கிப் பற்றாக்குறையை தீர்க்க ரிசர்வ் வங்கி நிதி உதவி செய்ய நேரிடும்.” என தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவன இயக்குனரான சவும்யஜித் நியோகி, “ரிசர்வ் வங்கி தற்போது இதை சமாளிக்க ரெபோ வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பது ஓரளவு உதவியாக இருக்கும். தேர்தல் முடிந்த பிறகு இந்த நிலை மாற வாய்ப்புள்ளது. அப்போது செலவுகள் குறைவதால் பண பரிமாற்றம் குறையும் என்பதால் வங்கிகள் பண பற்றாக்குறை நீங்க வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.