சென்னை
17வது மக்களவைக்கான 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 95 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக 91 தொகுதிகளில் கடந்த 11ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், இன்று 2வது கட்ட வாக்குப்பதிவு சென்னை, புதுச்சேரி உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
97தொகுதிகளில் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வேலூர் மற்றும் திரிபுராவில் ஒரு தொகுதிக்கான தேர்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மீதமுள்ள 95 தொகுதி களில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
முன்னதாக நேற்று முதலே வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டு, நேற்று இரவு அனைத்து வாக்குச்சாவடிகளுக் கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு, அவைகளுக்கு மின் இணைப்பு கொடுத்து சரிபார்க்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை சரியாக 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது.
பொதுமக்கள் அமைதியான முறையில் தங்கள் வாக்குகளை செலுத்தும் வகையில், வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம், கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோர், சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.