ஜம்புரா, திரிபுரா
திரிபுரா மாநிலம் ஜம்புரா சிற்றூரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்களுக்கு நூதன மிரட்டல் விடப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கொவாய் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஜம்புரா என வழங்கப்படுகிறது. இந்த சிற்றூர் கிழக்கு திரிபுரா என்னும் மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தனி தொகுதியில் உள்ளது. மக்களவை தெர்தலின் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் அதாவது நாளை இந்த சிற்றூரில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த சிற்றூரில் வாக்காளர்களை எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்னும் மிரட்டல் கொண்ட கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் இன்று காலை கிடைத்துள்ளன. வெட்டப்பட்ட ஒரு கோழியின் தலையுடன் இருந்த அந்த சுவரொட்டிகளில், “நீங்கள் வரும் 18 ஆம் தேதி அன்று வாக்களிக்க சென்றால் உங்களுக்கும் இதே நிலை உண்டாகும்” என எழுதப்பட்டுள்ள்து.
இந்த சுவரொட்டிகள் இந்த கிராமத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் அனைவரது வீட்டு வாசலில் மட்டும் கோழி தலையுடன் காணப்பட்டுள்ளன. இது குறித்து கொவாய் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிர்மல் பிஸ்வாஸ் இது பாஜக ஆதரவாளர்களின் மிரட்டல் எனவும் கிழக்கு திரிபுரா தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளரை தோற்கடிக்க இவ்வாறு சதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.