லக்னோ:

பாஜகவுக்கு வாக்களிக்கும் கிராமப்புற வாக்காளர்களை ஏ,பி,சி,டி என வகைப் படுத்தியிருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


கடந்த வாரம் சுல்தான்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால், அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியாது.

முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டாலும் நான் வெற்றி பெறுவேன். எனினும் என் தேவையை அவர்கள் உணர்வார்கள் என்று கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சை பேச்சை மேனகா காந்தி பேசியிருக்கிறார்.

சுல்தான்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பாஜகவுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை ஏ,பி,சி,டி என வகைப்படுத்தியுள்ளோம். இதன் அடிப்படையில்தான் அந்த கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படும்.

பாஜகவுக்கு 80 சதவீதம் வாக்களிக்கும் கிராமம் ஏ எனவும், 60 சதவீதம் வாக்களிக்கும் கிராமம் பி எனவும், 50 சதவீதம் வாக்களிக்கும் கிராமங்கள் சி, டி எனவும் வகைப்படுத்தியுள்ளோம்.

வருண்காந்தி போட்டியிடும் பிலிப்பிட் மக்களவை தொகுதியில் இந்த வகைப்படுத்தும் முறை ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேனகா காந்தியின் இத்தகைய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.