
வாரணாசி: மோடியின் ஆட்சியில்தான் மரணமடைந்த ராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம் என்று குற்றம் சாட்டியுள்ளார் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ்.
ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உணவின் தரம் சரியில்லை என்று வெளிப்படையாக புகார் தெரிவித்த காரணத்திற்காக, மோடி அரசால், ராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் தேஜ் பகதூர் யாதவ். இவர், உத்திரப்பிரதேச மாநில வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “நமது நாட்டில் ராணுவத்தினருக்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. ஆனால், அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே, கடந்த 2013ம் ஆண்டு நடந்த ராணுவ வீரர் ஹேம்ராஜ் கொலையை அரசியலாக்கினார் மோடி. அதில் அவர் செய்த அரசியலை நம்பிய பலர், மோடி பிரதமராகிவிட்டால் நம் நாட்டின் ராணுவம் மிகவும் வலிமையாகும் என்றே நினைத்தார்கள்.
ஆனால், அவர் ஆட்சிக்கு வந்ததும் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அவர் ஆட்சியில் அமர்ந்த நாள் முதல், எதிரிகளால் கொல்லப்படும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, சென்ற பத்தாண்டுகளில் கொல்லப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கைக்கு சமமாக உள்ளது.
மேலும், கடந்த ஓராண்டில் மட்டும், துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த 997 வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சி உண்மையை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த தற்கொலை சம்பவங்களுக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு.
நமது நாட்டின் வீரர்கள் மோசமாக நடத்தப்படுவதே, அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமாகிறது. வீரர்களுக்கென அனுமதிக்கப்பட்ட விடுமுறைகள்கூட கிடைப்பதில்லை மற்றும் அவர்கள் மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவதற்கும் தடை உள்ளது.
ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உணவின் மட்டமான தரம் பற்றி நான் வீடியோ மூலமாக வெளிப்படுத்தியப் பிறகுதான், மொபைல் ஃபோன் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஏனெனில், ராணுவத்தில் நடக்கும் முறைகேடுகளை அவர்கள் வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதால்தான்.
ராணுவத்தினர் தொடர்பாக, தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார் மோடி. ஆனால், பதவியில் அமர்ந்த பின்னர், எதையுமே நிறைவேற்றவில்லை. நிலைமை மோசமானதுதான் மிச்சம்.
எனவே, ராணுவத்தை அரசியலாக்கிய மோடிக்கு பாடம் புகட்டவே இந்தத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறேன்” என்று தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
– மதுரை மாயாண்டி
[youtube-feed feed=1]