காந்திநகர்:
குஜராத்தில் ஆளும் கட்சியான பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லாது என்று குஜராத் மாநிலஉயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், உடனே அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதுடன் ஆளும் பாஜக மாநில அரசு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், துவாரகா தொகுதியில் பாஜக சார்பில் பாகுபா மேனக் என்பவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில், மேராமன் ஆகிர் போட்டியிட்டிருந்தார்.
வேட்புமனு பரிசீலனையின்போது, பாகுபா மேனக், அவரது மனுவை முன்மொழிந்தவர், தொகுதியின் பெயரை குறிப்பிடவில்லை என்று சலசலப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், அவரது மனு ஏற்கப்பட்டது. தேரதலிலும் போட்டியிட்டு மேனக் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, பாகுபா மானக் வெற்றி பெற்றது செல்லாது என்றும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மேராமன் ஆகிர் குஜராத் உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பரேஷ் உபாத்யாயா பரபரப்பு தீர்ப்பளித்தார்.
அதில், பாஜக சார்பில் போட்டியிட பாகுபா மேனக் வேட்பு மனு தாக்கல் செய்ததில் தவறு இருப்பதை உறுதி செய்த நீதிபதி, பாகுபா மேனக் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்தார்.
அத்துடன் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி மறுத்த நீதிபதி, துவாரகா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.