சேலம்:

கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சேலம் வந்த ராகுல்காந்தி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவருடன் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது, நீட் தேர்வு தேவையா, வேண்டாமா என்பது குறித்து   மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் சேலம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  பேசிய ராகுல்காந்தி  மீண்டும் உறுதி அளித்தார்.

சேலத்தில்  பிரசார கூட்டத்தில், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ள் அதிகாரம் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.  மக்களின் குரலை கேட்கிறோம்; கருத்துப் பரிமாற்றங்களை கேட்கிறோம் என்று பேசியவர், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, தொழில்துறை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

கருணாநிதி என்பவர் சாதாரண மனிதர் அல்ல; தமிழர்களின் ஓங்கி ஒலித்த குரலாக இருந்தார் தமிழக அரசு கருணாநிதியை அவமானப்படுத்தியதன் மூலம், தமிழர்களையே அவமானப்படுத்திய தாக எண்ணுகிறேன். மோடியின் வெறுப்பு அரசியலை, விருப்பு அரசியலை கொண்டு வீழ்த்துவோம் தமிழக மக்கள் விரும்பாத திட்டங்களை எந்த சக்தியாலும் செயல்படுத்த முடியாது.

இவ்வாறு  ராகுல் காந்தி பேசினார்.

முன்னதாக வரவேற்று  பேசிய ஸ்டாலின்,  “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட உடன், உடனடியாக டெல்லிக்குப் பறந்து வந்து ராகுல் காந்திக்கு என்னுடைய வாழ்த்துகளைச் சொல்ல வேண்டும், மாலை அணிவித்துப் பாராட்ட வேண்டும் என்று கருதினேன் என்று கூறியவர்,  திராவிட இயக்கத்தின் எண்ணங்களை அப்படியே ராகுல் காந்தி அந்தத் தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்து இருப்பதாகவும் பாராட்டினார்.

எப்படி திமுக தேர்தல் அறிக்கை ஒரு ஹீரோ போன்று உள்ளதோ, அதுபோல் ராகுல் காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கின்றது. அண்மையில் வெளியிட்ட மோடியின் தேர்தல் அறிக்கை ஜீரோவாக இருக்கின்றது.

திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கடுமையான விமர்சனம் எழுந்தது.  மத்திய அரசு நிறை வேற்ற வேண்டிய அறிவிப்புகளை, திட்டங்களை எப்படி மாநிலத்தில் இருக்கக்கூடிய ஒரு கட்சி சொல்லலாம் என்று சிலர் விமர்சித்தனர்.

ஆனால்,  மத்தியில் நாம் கை காட்டக்கூடிய ஆட்சிதான் மத்தியில் வரப்போகின்றது. ராகுல் காந்தி தான் பிரதமராக வந்து அமரப் போகிறார். எனவே, அந்த தைரியத்தில், அந்த நம்பிக்கையில் தான் தேர்தல் அறிக்கையில் அவை எல்லாவற்றையும் சேர்த்து வெளியிட்டோம், ராகுல் காந்தி வெளியிட்டு இருக்கக்கூடிய தேர்தல் அறிக்கையே அதற்கு சாட்சியாக அமைந்திருக்கின்றது என்றார்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக சேலம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலி னுக்கும், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும்,  முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் இருவருக்கும் ஏர்கலப்பையை நினைவுப் பரிசாக வழங்கினார்.

சேலம் பொதுக்கூட்டத்தை திமுகவை சேர்ந்த சேலம் ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.