மும்பை: கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அரிசி மற்றும் எருமை மாட்டிறைச்சி ஆகியவற்றின் அளவு குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அரசு தரப்பில் கூறப்படுவதாவது; கடந்த ஏப்ரல் – பிப்ரவரி காலகட்டத்தில், முந்தைய ஆண்டில் 10.57 மில்லியன் டன்களாக இருந்த அரிசி ஏற்றுமதியில் 9.4% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முக்கிய வாடிக்கையாளரான வங்கதேச நாட்டில், நல்ல அறுவடை நடைபெற்றதால், அந்நாடு இறக்குமதி அளவை குறைத்துவிட்டது.
மேலும், எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியும் 9.6% அளவிற்கு குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில், 1.12 மில்லியன் டன்கள் எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியாகின. முக்கிய இறக்குமதியாளரான சீனா, தனது இறக்குமதி அளவை குறைத்துவிட்டதே இதற்கு காரணம்.
அதேசமயம், அமெரிக்காவிலிருந்து வந்த தேவை காரணமாக, கோந்து ஏற்றுமதி 3.5% அதிகரித்துள்ளது.
அரிசி, எருமை மாட்டிறைச்சி மற்றும் கோந்து ஆகியவற்றை உலகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாக திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி