சென்னை:
தேர்தல் சமயத்தில், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனு குறித்து பரிசீலனை செய்தே அவர்களது வேட்புமனு ஏற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.
ஆனால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவிக்கும் தகவல்கள் உண்மைதானா என்பது குறித்து எந்தவித ஆய்வோ, கேள்வி எழுப்பாமலே வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவது பல்வேறு நிகழ்வுகள் மூலம் உறுதியாகிறது.
தேர்தல் ஆணையர்களின் ஏனோதானோ என்ற நடவடிக்கைகள், தேர்தல் ஆணையத்தின் விதிகள் அனைத்தும் கண்துடைப்புதானோ என்ற சந்தேகத்தை மக்களிடையே எழுப்பி உள்ளது.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மோகன்ராஜ் தனக்கு உலக வங்கியில் ரூ.4லட்சம் கோடி கடன் இருப்பதாக, வேட்பு மனு தாக்கலில் தெரிவித்திருந்தும், அவரது மனு ஏற்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது தென்காசி தனி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை பெண் வேட்பாளர் தனது வயது 24 என்று பிரம்மாண பத்திரத்தில் தெரிவித்திருக்கும் நிலையில், அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான பொன்னுத்தாயி, தான் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரம்மாண பத்திரத்தில், கோபிநாத் என்பவரின் மனைவியின் வயது 24 என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பு சட்டப்படி, ஒருவர் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடு வதற்கு 25 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது தென்காசி (தனி) தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பொன்னுத்தாயி என்பவர் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதைக்கூட கவனிக்காமல், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை மேலும் கேலிக்குறியதாக்கி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்கூட தெரியாமல், தேர்தல் அதிகாரிகள் செயல்படுகிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவின்போது எப்படிச் செயல்படு வார்கள் என்பதும் சித்திக்க வைக்கிறது.
தென்காசி பொன்னுதாய் வயது தொடர்பாக அறப்போர் இயக்க நிர்வாகிகள் மிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் புகார் தெரிவிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பலமுறை பயிற்சி அளித்தும், கடமையை சரிவர நிறைவேற்றாத அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது….
இந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் குறைந்தபட்ச வயது 25 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை 21 ஆக குறைக்கக்கோரி பல ஆண்டுகளாக தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 1988-ம் ஆண்டு அரசியல் சாசனம் 61-வது முறையாகத் திருத்தப்பட்டு, வாக்களிக்கும் வயது 21-ல் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் நிற்பதற்கான வயதை குறைக்கவில்லை. இது தேர்தலில் போட்டியிட விரும்பும் இளைஞர்களுக்கு வைக்கப்பட்ட ‘செக்’ என்று விமர்சிக்கப்பட்டது.
இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்று கூறிவரும் அரசியல் கட்சிகளை அவர்களை தேர்தல் பணிகளுக்கு ஊறுகாயாக மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில், அவர்கள் போட்டி யிடும் வயதை குறைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்க முயற்சிப்பது இல்லை.
கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தால் அதற்காக கொதித்தெழும் அரசியல் கட்சியினர், இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கும் வகையில் அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பயப்படுகின்றனர்.
இனிமேலாவது இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்கும் வகையில் வயது வரம்பை குறைக்க நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யுங்கள் அரசியல்வாதிகளே…