டில்லி:

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாலகோட்டில் நடத்தப்பட்ட இந்திய விமானப்படை தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி பேசியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரியிடம், தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புல்வாமாக தாக்குதலை தொடர்ந்து, பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை பா.ஜ. அரசியல் ஆதாயத்திற்காக தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையம், நாட்டின்  ராணுவம் பொதுவான அமைப்பு. அது அரசியலுக்குள் இழுக்கக்கூடாது என அறிவுரை கூறியது. ஆனால், பாஜகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

நேற்று மகாராஷ்டிரா மாநிலம் லட்டூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேர்தலில் முதன்முறையாக ஓட்டு போடும் மக்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். உங்களது முதல் ஓட்டடை பாலகோட் விமானப்படை தாக்குதல் செய்தவர்களுக் காக அர்ப்பணிக்க முடியுமா?, புலவாமா தாக்குதலில் மரணத்திவர்களுக் காக அர்ப்பணிக்க முடியுமா?”  பயங்கரவாதத்தை அதன் பிறப்பிடத்திலேயே அழிப்பது தான் புதிய இந்தியாவின் கொள்கை என பேசினார்.

மோடியின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. இறந்தவர்களை கொண்டு பாஜக வாக்கு கேட்பதாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், மோடியின் பேச்சு குறித்து, அறிக்கை அளிக்கும்படி மகாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.