புதுடெல்லி: தனது சம்பள நிலுவைத் தொடர்பான 47 ஆண்டுகால வழக்கில் வெற்றிபெற்றுள்ளார் பா.ஜ.க. பிரமுகர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி. ஐஐடி – டெல்லியில் பணியாற்றியது தொடர்பானது இவ்வழக்கு.
அமெரிக்காவின் ஹாவர்டு பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றிய சுப்ரமணிய சுவாமி, அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பியப் பிறகு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உதவியால் ஐஐடி – டெல்லியில் பொருளாதாரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், அன்றையப் பிரதமர் இந்திரா காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கட்டுரையை எழுதியதால், பிரதமரின் கோபத்திற்கு ஆளான சுப்ரமணிய சுவாமி, திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார் சுப்ரமணிய சுவாமி. ஆனால், இந்த வழக்கு பல்லாண்டு காலம் நீடித்தது. ராம்ஜெத்மலானி, அருண் ஜெட்லி போன்றோர், இவருக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். கடைசியாக, இவரின் பணிநீக்கம் செல்லாது என 1991ம் ஆண்டு தீர்ப்பு வந்தது.
மீண்டும் பணியில் சேர்ந்த அவர், ஒருநாள் மட்டுமே பணியாற்றிவிட்டு, தனது பணியை ராஜினாமா செய்துவிட்டார். அதனையடுத்து, 1972 முதல் 1991 வரையிலான 19 ஆண்டுகால சம்பள நிலுவைத்தொகையை தனக்கு வழங்க வேண்டுமென வழக்குத் தொடர்ந்தார்.
தற்போது, நீண்ட காத்திருப்புக்குப் பின்னர், அவரின் சம்பளத் தொகை 8% வட்டியுடன் வழங்கப்பட வேண்டுமென தீர்ப்பு வந்துள்ளது. இதனடிப்படையில், அவர் ரூ.40 லட்சத்திற்கும் மேலாக பெறுவார் என்று கூறப்படுகிறது.
சுமார் 47 ஆண்டுகளாக ஒரு சாதாரண வழக்கு நடந்து வந்துள்ளதைப் பார்க்கையில், நிறைய கேள்விகள் எழத்தான் செய்கின்றன!
– மதுரை மாயாண்டி