மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் கவனிக்கப்படுகின்ற தொகுதிகளில் முக்கியமானது தருமபுரி. இங்குதான், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அன்புமணி ராமதாஸ், தற்போது போட்டியிடுகிறார். அவர், இந்த தொகுதியின் நடப்பு உறுப்பினரும்கூட. இந்த மாவட்டம் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று.
பாலக்கோடு, தருமபுரி, பெண்ணாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் மற்றும் மேட்டூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளதுதான் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி.
* அதிமுக – பாஜக கூட்டணியில், பாமக சார்பில், இத்தொகுதியில் அன்புமணி மீண்டும் களமிறங்கியுள்ளார்.
* திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில், திமுகவினால் களமிறக்கப்பட்டுள்ளவர் செந்தில்குமார். சேலம் மாவட்டத்திலிருந்து கடந்த 1965ம் ஆண்டு தருமபுரி தனி மாவட்டம் பிரிக்கப்பட காரணமாக இருந்த வடிவேலு கவுண்டரின் பேரன்தான் இவர்.
* தினகரனின் அமமுக சார்பில், முன்னாள் அமைச்சர் மற்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் பழனியப்பன் போட்டியிடுகிறார்.
இந்த மூவரும்தான் இந்தத் தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள்.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில், அன்புமணி ராமதாஸ் சுமார் 77,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியில் இளவரசன் – திவ்யா காதல் விவகாரமும், பாமக நிறுவனர் ராமதாஸ், தருமபுரி தொகுதியில் மட்டும் மேற்கொண்ட தனிப்பட்ட தீவிர பிரச்சாரமும் முக்கியப் பங்கு வகித்தன என்று கூறப்பட்டது.
இத்தொகுதியில் வன்னியர் சமூகத்தினரே மிகப் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களுக்கடுத்து, தலித் சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.
இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் – 14.67 லட்சம்
ஆண்கள் – 7.47 லட்சம்
பெண்கள் – 7.20 லட்சம்
திருநங்கைகள் – 120
அன்புமணி Vs பாதகங்கள்
கடந்தமுறை சில காரணங்களினால் எளிதாக வெற்றிபெற்ற அன்புமணி, இந்தமுறை கரை சேர்வதில், ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. முதல் தலையாயப் பிரச்சினை, கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்துள்ள மத்திய – மாநில அரசுகளுடன் பாமக கூட்டணி சேர்ந்திருப்பது. இந்த எதிர்ப்பலையினூடே அவர் எப்படி படகை செலுத்தப் போகிறார்? என்கின்றனர் சில விமர்சகர்கள்.
இதற்கடுத்துப் பார்த்தால், தமிழக மற்றும் மத்திய ஆளுங்கட்சிகளுடன் கடந்த சிலமாதங்கள் முன்புவரை அவர்கள் மேற்கொண்ட மோதல் போக்கு.
தனியே புத்தகம் போட்டு ஆளுங்கட்சியைத் தாக்குமளவிற்கு பாமக – அதிமுக இடையே உறவு மோசமடைந்திருந்தது. எவ்வளவு மோசமாக அவர்களை தாழ்த்திப் பேசமுடியுமோ, அந்தளவிற்கு பேசிவிட்டு, இப்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துக்கொண்டதானது, பல தரப்புகளிலும், குறிப்பாக சமூகவலைதளங்களில் கேலி – கிண்டல்களைப் பெருக்கியுள்ளது.
தாங்கள் கூட்டணி சேர்ந்த நியாயத்தை விளக்குவதற்காக, தனியாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பெல்லாம் நடத்த வேண்டிய நெருக்கடி அக்கட்சிக்கு ஏற்பட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
மேலும், காடுவெட்டி குரு மறைவிற்கு பின்னர், அவரின் குடும்பத்தினரில் பெரும்பான்மையோர், ராமதாஸ் குடும்பத்திற்கு எதிராக திரும்பியிருப்பதும், அவர்களில் சிலர், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுடன் இணைந்திருப்பதும் பாமகவுக்கு சிக்கலே.
இதுதவிர, வடமாவட்ட வன்னியர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கையும் பிரச்சார வலிமையையும் கொண்டுள்ள வேல்முருகன், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, பிரச்சாரத்திலும் ஈடுபடுவதோடு, வன்னியர் சங்க சொத்துப் பிரச்சினையைக் கிளப்பி வருவதும், அன்புமணிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
மேலும், தேமுதிகவுடனும் உறவு சரியில்லை. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட கசப்புணர்வு, ராமதாஸ் நேரடியாக சென்று விஜயகாந்தை சந்தித்துவிட்டு வந்தபோதும் மாறவில்லை என்றே கூறுகின்றனர்.
எனவே, இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. நாம் ஏன் அவர்களுக்காக(இன்னொரு கட்சி) வீணாக உழைக்க வேண்டுமென்ற எண்ணம், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சித் தொண்டர்களின் மனதிலும் உள்ளதாக கள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சேலம் – சென்னை 8 வழிச்சாலையை கடுமையாக எதிர்த்த பாமக, தற்போது அதற்கு காரணமானவர்களுடனேயே கைகோர்த்துக் கொண்டுள்ளது. சாலை எதிர்ப்பு கொள்கையை கைவிடவில்லை என பாமக தரப்பில் சொல்லப்பட்டாலும், அவர்கள் அதிமுகவிடம் கொடுத்த 10 நிபந்தனைகள் அடங்கியப் பட்டியலில் இந்த சாலை எதிர்ப்பு திட்டம் இடம்பெறவில்லை என பல விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். (இந்த சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துவிடடாலும்கூட, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என தமிழக அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்)
மேலும், தொகுதி மேம்பாடு என்று வருகையில், அன்புமணியின் மீது குற்றச்சாட்டுகள் நீள்கின்றன. குடிநீர் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, வேளாண்மைக்கான நீர்ப்பாசன சிக்கல்கள் உள்ளிட்டவைகளில், கடந்த 5 ஆண்டுகளில், தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அன்புமணியின் செயல்பாடுகள் மோசம் என்கின்றனர் தொகுதிவாசிகள்.
அரூரில் சிப்காட்(SIPCOT) அமைக்கப்படும் மற்றும் பெண்ணாகரத்தில் சிட்கோ(SIDCO) அமைக்கப்படும் என்று அன்புமணி அளித்த வாக்குறுதிகள் இன்னும் வாக்குறுதி வடிவத்திலிருந்து மாறவேயில்லை. தங்களின் பிள்ளைகள் படிப்பை முடித்தவுடன், வேலை தேடி வெளியூர்களுக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது என்பது அந்த தொகுதிவாசிகளின் புலம்பலாக உள்ளது.
இதுதவிர, இன்னொரு விஷயமும் முக்கிய சவாலாக மாறியுள்ளது. கடந்த 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போதே, தான் வெற்றிபெற்றால், இந்த தருமபுரி தொகுதியிலேயே நிரந்தரமாக தங்குவதாக வாக்குறுதி அளித்தார் அன்புமணி. ஆனால், அவர் தைலாபுரத்தை விட்டு வெளியிலேயே வரவில்லை. ஏதேனும் சில நிகழ்ச்சிகளுக்காக மட்டும், தனது தொகுதிக்கு வந்துபோனதோடு சரி. இதனால், தன்மீதான நம்பகத்தன்மையை அவர் இழந்துள்ளார் என்கின்றனர்.
அன்புமணி & சாதகங்கள்
அதேசமயம், பலவிதமான எதிர்மறை அம்சங்கள் அவரை நெருக்கினாலும், அவருக்கான நேர்மறை அம்சங்களும் இல்லாமல் இல்லை. சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட 36 கி.மீ. நீளமுள்ள தருமபுரி – மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தை இவர் தனது சாதனையாக கூறிக்கொள்ள வாய்ப்புள்ளது. அதிமுக மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை உறுதியான பிறகே, இந்த அடிக்கல் விழா நடந்ததென்பது, இவருக்கான வாக்குகளை ஈர்க்க உதவும் என்று கூறப்படுகிறது.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவிகள் எதுவும் இல்லாத காரணத்தினாலேயே, இவரால், தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை என்று கூறுவோரும் உள்ளனர்.
கடந்தாண்டுகளில், இத்தொகுதியின் பாமக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செந்தில் கூறுவதாவது, “இத்தொகுதியின் தண்ணீர் பிரச்சினைகளைத் தீர்க்க, 10 திட்டங்களை அடையாளம் கண்டுள்ளார் அன்புமணி. அவர், உறுதியளித்தபடி தருமபுரி – மொரப்பூர் ரயில்வே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே அவர் வெற்றிபெறுவது நிச்சயம்” என்றுள்ளார்.
திமுக வேட்பாளருக்கான வாய்ப்புகள்
வலுவான குடும்பப் பின்னணி, நரேந்திர மோடி அரசின் மீதான மலையளவு எதிர்ப்பு, தமிழ்நாடு அரசின் மீதான வெறுப்பு போன்றவை எங்களின் வெற்றிக்கு மிக எளிதாக துணைபுரியும் என்கின்றனர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான கூட்டணி, தொகுதியில் வன்னியர்களுக்கு அடுத்து அதிகமாக வசிக்கும் ஆதி திராவிட மக்களின் வாக்குகளை அள்ளுவதற்கு பேருதவி புரியும் என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
– மதுரை மாயாண்டி