ம்பால்

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிப்புர் பத்திரிகையாளர் கிஷோர்சந்திர வாங்கெம் மை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர் சந்திர வாங்கெம் என்பவர் தனது முகநூலில் வீடியோக்கள் மற்றும் செய்திகள் பதிந்து வந்தார்.  அந்த வகையில் இவர் பதிந்த ஒரு வீடியோவில் ஜான்சி ராணிக்கு மணிப்பூர் முதல்வர் பைரன்சிங்  விழா எடுத்தது குறித்தும் ஆர் எஸ் எஸ் குறித்தும் தவறாக பேசப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

இதனால்  கைது செய்யப்பட்ட வாங்கெம் மீது தேசிய பாதுகாப்பு  சட்டத்தின் கீழ் ஒரு வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டது.   இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் இம்பாலில் உள்ள சஜிவா சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.   வாங்கெம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் இவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.

இதை ஒட்டி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.  அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம்  வாங்கெம் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதியபட்ட வழக்கை ரத்து செய்து அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இது குறித்து கிஷோர்சந்திர வாங்கெம் மனைவி ரஞ்சிதா, “தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து அவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.   ஆனால் அந்த உத்தரவின் நகல் இன்னும் வரவில்லை.  அது வந்த உடன் வாங்கெம் விடுவிக்கப்படுவார்” என தெரிவித்துள்ளார்.