லண்டன்:

ஏர் இந்தியா விமானத்தில் மதுபானம் கேட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை பெண் வழக்கறிஞருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மனித உரிமை பெண் வழக்கறிஞர் சீமோன் பர்ன்ஸ் பயணம் செய்தார்.

திடீரென எழுந்த அவர், போதையில் தள்ளாடியவாறு தனக்கு மதுபானம் வேண்டும் என்று விமானப் பணிப் பெண்களையும், மற்ற ஊழியர்களையும் தொந்தரவு செய்தார்.

மதுபானம் இல்லை என்றதும். அவர்கள் முகத்தில் எச்சிலை உமிழ்ந்து அநாகரிகமாக நடந்து கொண்டார்.

இது தொடர்பாக 5 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றின் அடிப்படையில் லண்டன் நீதிமன்றத்தில் 50 வயதான பெண் வழக்கறிஞர் சீமோன் பர்ன்ஸ் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிக்கோலஸ் வுட், இதுபோன்ற நபர்களின் நடவடிக்கையால் விமானப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுகிறது. சிலர் இதுபோன்ற குற்றங்களை அடிக்கடி செய்கின்றனர்.

விமான ஊழியர் முகத்தில் எச்சிலை உமிழ்வது அவமானகரமான செயல். மற்றவர்களை விரக்தியடையச் செய்யும் செயல்.

குடித்து விட்டு விமானத்தில் கலாட்டா செய்ததால் பர்ன்ஸுக்கு 6 மாத சிறைத் தண்டனையும், ஊழியர்களை தாக்கியதால் 2 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. ஏர் இந்தியாவையும் இந்தியர்களையும் அவர் அவமதித்திருக்கிறார். இரு குற்றங்களுக்கான தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் பர்ன்ஸுக்கு ஆஜரான வழக்கறிஞர் மார்க் கிம்சி, தான் நடந்து கொண்டதை எண்ணி பர்ன்ஸ் தலைகுனிந்துள்ளார். மன்னிப்பும் கேட்டுள்ளார்.
எனவே, தண்டனை ஏதும் விதிக்க வேண்டாம். அவர் நடந்து கொண்ட விதம் வீடியோவாக வைரலாகி வருகிறது. இதனால் அவரது நன்மதிப்பு கெட்டுவிட்டது.
பல்வேறு அச்சுறுத்தல்களையும் அவர் எதிர்கொண்டுள்ளார். அவரை வீட்டுக்காவலில் வைத்து, வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட தடை விதிக்கலாம் என்று வாதாடினார்.
ஆனால், அவரது வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இங்கிலாந்து பெண் வழக்கறிஞர், சிறை