டில்லி

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.   கடந்த 1999 ஆம் ஆண்டு முதல்  இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறுவதால் இவர் நிரந்தர மக்களவை உறுப்பினர் எனவே வாக்காளர்களால் குறிப்பிடப்படுகிறார்.    ஆகவே அவரை எதிர்க்க ஒரு வலுவான வேட்பாளரை பாஜக தேடி வந்தது.

பாஜக சார்பில் தற்போதைய மும்பை வடகிழக்கு தொகுதி மக்களவை உறுப்பினர் கிரீட் சோமையா என்பவர் சோனியாவுக்கு எதிரான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.   ஆனால் சமீபத்தில் வெளியான வேட்பாளர் புதிய பட்டியலில் கீரிட் சோமையாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த புதிய பட்டியலில் காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த தினேஷ் சிங் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.    இவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.  உத்திரப் பிரதேச சட்டசபை மேலவை முன்னாள் உறுப்பினரான தினேஷ் சிங் அந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக இருந்தார்.

தினேஷ் சிங் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பாஜகவில் இணைந்தார்.  அவர் மீது கடந்த 2013 ஆம் வருடம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுல்தான்பூர் – ரேபரேலி நெடுஞ்சாலையை முடக்கி போக்குவரத்தை நிறுத்தியதாக வழக்கு ஒன்று இருந்தது.    தினேஷ் சிங் பாஜகவில் இணைந்ததும் அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது.