உடல் நலக் குறைவால் ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79.
முள்ளும் மலரும், உதிரி பூக்கள், ஜானி போன்ற உணர்வுப் பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடத்தவர் நடிகர் மகேந்திரன்.
இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் கமல்ஹாசன். அதனைத் தொடர்ந்து கமல் பேசியதாவது:
மகேந்திரனுடன் வெகுநாள் நட்பு எனக்குண்டு. நாங்கள் குறைவாக படங்கள் செய்திருந்தாலும், நட்பு வலுவாகவே இருந்தது. பக்கத்து ஊர்க்காரர். திறமையான மனிதர்களில் ஒருவர் என நான் வியந்தவர்.
‘தங்கப்பதக்கம்’ காலத்திலிருந்தே அவரைத் தெரியும். பிறகு கூடி பல படங்கள் செய்திருக்கிறோம். ஆனால், முதலில் ‘முள்ளும் மலரும்’ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. தமிழ்ப் படங்கள் அதிகமாகச் செய்ய ஆர்வமில்லாமல் இருந்த பாலு மகேந்திராவையும் இவரையும் என்னுடைய வீட்டில் சந்திக்க வைத்தது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இரண்டு பேர் கையையும் சேர்த்துவைத்து, ‘வெற்றிப் படங்கள் எடுங்கள்’ என்று சொன்னேன். அதுபோலவே அவர்கள் செய்தார்கள் என கூறினார்.