சென்னை:
தமிழகத்தில் கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்படும் வரும் நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழுவினர் இன்று இரவு சென்னை வருகிறது. இதையடுத்து நாளை அனைத்துக்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதுவரை சுமார் 212 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா விலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று இரவு சென்னை வருகிறார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினரும் வருகின்றனர்.
நாளை, தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, நாளை மறுநாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
நாளை காலை 10 மணி முதல் 11:30 மணிவரை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் அனைத்து கட்சி கூட்டம்
11:30மணி முதல் இரவு 7 மணி வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம்
நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் கூட்டம்
‘நாளை மறுநாள் காலை 11:15 மணிக்கு தலைமை செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டம் .
இவ்வாறு அவரது நிகழ்ச்சி குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.