ரோம்: இத்தாலியின் சார்டினா கடற்கரையில், இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில், 22 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களும், கலைந்துபோன கருவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இறந்து கரை ஒதுங்கிய அந்த திமிங்கலத்தின் வயிற்றில், குப்பை பைகள், மீன் வலைகள், டியூப்கள், வாஷிங் மெஷின் திரவத்திற்கான பை உள்ளிட்ட பல பிளாஸ்டிக் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கர்ப்பமாக இருந்த அந்த திமிங்கலத்திற்கு, கரை ஒதுங்குவதற்கு முன்பாகவே, கரு கலைப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கரு, முதிர்ச்சியடைந்த நிலையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் 8 மீட்டர் நீளம் உடையதாக இருந்தது. திசுவியல் மற்றும் நச்சுவியல் ஆய்வு முடிவுகள் அனைத்தும் வெளிவந்த பிறகே, இந்த திமிங்கலத்தின் மரணத்திற்கான காரணம் முழுமையாக தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் கடற்கரைகளிலும், கடல்களிலும் பிளாஸ்டிக் பொருட்களால் இதுபோன்ற சூழலியல் இடர்பாடுகள் ஏற்படுவதை கருத்தில் கொண்டே, ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு, வரும் 2021ம் ஆண்டு முதல் தடைவிதிக்கும் முடிவை மேற்கொண்டது ஐரோப்பிய யூனியன்.
– மதுரை மாயாண்டி