சென்னை:
வருமான வரி சோதனை என்பது திகிலூட்டும் விஷயம் மட்டுமே, இங்கு யாரும் உத்தமர்கள் அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
வேலூரில் தொகுதி வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கடந்த 30ந்தேதி இரவு திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. அப்போது ரூ.10 லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியதாக தெரிவித்தனர். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய, மாநில அரசுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அதைத்தொடர்ந்து, இன்று துரைமுருகனின் நண்பர் சீனிவாசன், மற்றும் கட்சி உறுப்பினர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிமென்ட் குடவுனில் தெளிவாக வார்டு வாரியாக எழுதி, பணம் பார்சல் செய்து சாக்குப்பையில் அடைக்கப்பட்டு பதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்கள் வருமான வரி சோதனை குறித்து கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த கமல், வருமானவரி சோதனை செய்பவர்களும், செய்யப்படுபவர்களும் உத்தமர்கள் அல்ல. வருமான வரி சோதனை என்பது தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டும் விஷயம் தான் என்று கூறினார்.