அயோத்தியா:

நீ எந்த மதம் என்று கேட்காத இந்தியாவே என் உணர்ச்சிமிகு கனவு என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.


ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி மற்றும் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரலி தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய 3 நாள் பயணமாக அயோத்தியாவுக்கு பிரியங்கா காந்தி வந்தார்.

அப்போது அயோத்தியாவில் பள்ளி மாணவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துரையாடினார்.

அப்போது, உங்கள் கனவு என்ன என மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “இந்துவோ, கிறிஸ்தவரோ, முஸ்லிமோ, யாராக இருந்தாலும் நீ எந்த மதம் என்று கேட்காத இந்தியாவே எனது உணர்ச்சிபூர்வ கனவு” என்றார்.

தொடர்ந்து கலந்துரையாடிய அவர், “ஆண்களுக்கு பெண்கள் இணையானவர்கள். இப்போது நடத்தப்படுவது போல் அவர்கள் நடத்தப்படக்கூடாது” என்றார்.

நாட்டை காந்தி குடும்பம் குத்தகை எடுத்துள்ளதா? என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், “கடந்த 1972-ம் ஆண்டு மன்னர் பரம்பரையின் சலுகைகளை நிறுத்தியதே இந்திரா காந்திதான்” என்றார்.

ராகுல் காந்தியின் ஏழை மக்களுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று பாஜகவின் வாதத்துக்கு பதில் அளித்த பிரியங்கா, “தொழிலதிபர்களுக்கு கடனில் இருந்து அரசு விலக்கு அளிப்பது ஏன் என்று பாஜக சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.