இமயமலை அடிவாரத்தில் இருக்கும் குட்டி மாநிலம்-சிக்கிம். அதற்கும், தமிழ்நாட்டுக்கும் ஏதோ விட்ட குறை –தொட்ட குறை போலும்.
தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகள் எல்லாம்-தாய் கழகத்தின் பெயரை தங்கள் கட்சியில் இணைத்திருப்பதைப்போல்-
சிக்கிம் மாநிலத்திலும் பிராந்திய கட்சிகள் ‘சிக்கிம்’ என்ற வார்த்தையை தங்கள் கட்சி பெயரோடு ஒட்டி வைத்திருக்கும்.
அங்கு இப்போது ஆளும் கட்சியாக இருப்பது- சிக்கிம் ஜனநாயக முன்னணி.
எதிர்க்கட்சியாக இருப்பது- சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா.
இப்போது முதல்வராக இருப்பவர்-பவன் குமார் காம்ளிங். 25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அந்த பதவியில் இருந்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறவர்.
நம் ஊர் தி.மு.க.போல்- சிக்கிம் மாநிலத்தில் பிரபலமாக விளங்கிய கட்சி- சிக்கிம் சங்கராம் பரிஷத். 90 களில் அந்த கட்சி மாநிலத்தை ஆண்டபோது- மந்திரியாக இருந்தவர்- காம்ளிங்.
1993-ல் தாய் கட்சியை உடைத்து -சிக்கிம் ஜனநாயக முன்னணியை உருவாக்கினார்- காம்ளிங். சில ஆண்டுகளிலேயே தாய் கட்சியை வீழ்த்தி எம்.ஜி.ஆர்.போல் முதல்வர் ஆனார். அதே நாற்காலியில் 25 ஆண்டுகளாக அமர்ந்திருக்கிறார்.
காம்ளிங் மந்திரி சபையில்- அமைச்சராக இருந்தவர் – பிரேம் சிங் தமாங். முதல்வருடன் கசப்பு ஏற்பட்டு அவரிடம் இருந்து விலகி – 2009 –ல் சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சாவை தொடங்கி இன்றைக்கு அந்த கட்சியின் தலைவராக இருக்கிறார்.
சிக்கிம் மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது.
முதல்வர் காம்ளிங் அவரது முன்னாள் கூட்டாளி தமாங் இடையே தான் போட்டி. இங்கே பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் சேர்ந்து 5 சதவீத ஓட்டுகளை வைத்துள்ளன.
அத்தி பூத்தாற் போன்று தேசிய தலைவர்கள் வந்தால் பூங்கொத்து கொடுத்து வரவேற்க இரு கட்சிகளிலும் கொஞ்சம் ஆட்கள் உள்ளனர்..தேர்தலில் வெற்றி என்பதை இவர்கள் நினைத்து பார்க்கக்கூடாது.
இரு மாநில கட்சிகளும் ;எங்களுக்கே வெற்றி’ என ஜம்பம் அடித்தாலும் முடிவை தீர்மானிக்க –சிறிது நாட்கள் ஆகலாம்
–பாப்பாங்குளம் பாரதி