சென்னை:
டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் இன்று பல சுயேச்சைகளுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன், தனது கட்சிக்கு குக்கர் சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம், டில்லி உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றத்தையும் நாடினார். ஆனால், அவருக்கு குக்கர் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இந்த நிலையில், குக்கர் சின்னத்தை வேறு எந்த கட்சிக்கோ, சுயேச்சைக்கோ ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் அமமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம், இன்று தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்தது.
ஆனால், இதுகுறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் ஆணையர்கள் முடிவு செய்வார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சில பகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் அலுவலர்கள் ஒதுக்கி உள்ளார்கள்.
திருச்சி, மதுரை, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.