சென்னை:

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில், ஏற்கனவே அவர் வெற்றிபெற்ற சின்னமாக குக்கர் சின்னத்தை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என்று டிடிவி தினகரன் கட்சிக்கு ஆதரவாக கூட்டணி கட்சியான தமிழ்நாடு முஸ்லிம் லீக்கட்சி  சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற டிடிவி தினகரன், தனது கட்சிக்கு குக்கர் சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் தற்போது உச்சநீதி மன்றத்தில் அறிவுறுத்தலின் பேரில் பொதுச்சின்னமாக பரிசுபெட்டி சின்னத்தை ஒதுக்கி உள்ளது.

இந்த நிலையில், குக்கர் சின்னத்தை வேறு எந்த கட்சிக்கோ, சுயேச்சைக்கோ ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் அமமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஓட்டுக்காக வீடுகள் தோறும்  அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தினர் குக்கர்,  தவா போன்ற வீட்டு உபயோகப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.

டிடிவி ஆதரவாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உடனேயே அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இலவசத்துக்கான  டோக்கன்களையும்  வழங்கி வந்தனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், குக்கர்கள் விநியோகம் இரவு 10மணிக்கு மேல் ஜோராக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக வெற்றிவேல் போட்டியிடும்  பெரம்பூர் தொகுதியில், இரவு முழுவதும் குக்கர், தவா போன்றவை வாக்காளர்களுக்கு  விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்தந்த பகுதியை சேர்ந்த அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு தெரிந்தும் யாரும் தகவல் தெரிவிக்க முன்வருவதில்லை… அவர்களுக்கு தேவையான வசதிகள் சென்று சேர்ந்து விடுகிறது. அதையும் மீறி யாராவத  தகவல் தெரிவித்தால்… அவ்வளவுதான் என்று வெற்றிவேல் ஆட்கள் மிரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அமமுகவுக்கு பரிசு பெட்டி சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.  குக்கர் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில், குக்கர் சின்னத்தை வேறு சிறிய கட்சிக்கோ, சுயேச்சைக்கோ தேர்தல் ஆணையம் ஒதுக்கினால், தங்களுக்கு விழ வேண்டிய ஓட்டு, அவர்களுக்கு சாதகமாகி விடும் என்ற நோக்கத்திலேயே, குக்கர் சின்னம் வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என்று மனு கொடுத்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.