ஸ்ரீநகர்

னந்த நாக் மக்களவை தொகுதியில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி  போட்டி இடுகிறார்.

காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தியின் மக்கள் குடியரசுக் கட்சி பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது.   பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் அவர் ஆட்சி கவிழ்ந்தது.   அதன் பிறகு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

வரும் மாதம் நடைபெற மக்களவை தேர்தலுடன் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.   ஆனால் காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்புக்களை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மெகபூபா முப்தி, “ஜம்மு பகுதியில் உள்ள ஜம்மு மற்றும் உதாம்பூர் தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிடாது.   கடந்த மக்களவை தேர்தலில் ஜம்மு தொகுதியில் 1.75 லட்சம் வாக்குகளும், உதாம்பூர் தொகுதியில் 30000 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இந்தப் பகுதியில் உள்ள மதசார்பற்ற வாக்குகளை பிரிக்க எங்கள் கட்சி விரும்பாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் அனந்த நாக் மக்களவை தொகுதியில் நான் போட்டி இடுகிறேன்.  ஸ்ரீநகர் தொகுதியில் ஆகா மோசின் போட்டி இடுகிறார்.   லடாக் தொகுதி வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.” என அறிவித்துள்ளார்.

மக்கள் குடியரசுக் கட்சியின் சார்பில் பாரமுல்லா தொகுதிக்கு தொழிற்சங்க தலைவர் அப்துல் கயூம் வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.