புதுடெல்லி: பொதுத்தேர்தலில், ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இரண்டு வாரங்கள் கழித்து விசாரிப்பதாக கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.
இதுகுறித்து கூறப்படுவதாவது; நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடைசெய்யும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விரைவாக விசாரிக்கப்படும் மனுக்களின் பட்டியலில் சேர்க்குமாறு கோரப்பட்டிருந்தது. ஆனால், “பொருத்தமான அமர்வின் முன்னால் இரண்டு வாரங்கள் கழித்து பட்டியலிடவும்” என்று கூறிவிட்டது ஷந்தானகவுடர் மற்றும் அப்துல் நசீர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு.
தேர்தல் கமிஷனால், உச்சநீதிமன்றத்தில் முன்பே தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், 2004ம் ஆண்டினுடைய தனது தேர்தல் சீர்திருத்த முன்மொழிவுகளை குறிப்பிட்டிருந்தது தேர்தல் கமிஷன். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவருவது அதில் முக்கியமானது.
ஆனால், தேர்தல் கமிஷனின் இந்த முன்மொழிவை, அனைத்துக் கட்சி கூட்டத்தினுடைய முடிவை காரணம் காட்டி, நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த 1998ம் ஆண்டு நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி