டில்லி

தனக்கு நன்கு தெரிந்தவராக இருந்தும் பிரதமர் மோடி தன்னிடம் பாலகோட் பற்றி பேசவில்லை என ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சாம் பித்ரோடா என அழைக்கப்படும் சத்யன் கங்காராம் பித்ரோடா. கடந்த மாதம் 26 ஆம் தேதி பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதிகளின் முகாம்கள் மீது குண்டு வீசி அழித்தது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து சாம் பித்ரோடா வினா எழுப்பினார். ஆனால் அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை.

தற்போது 77 வயதாகும் சாம் பித்ரோடா ஒரு பேட்டியில், “பாஜகவுக்கும் எங்களுக்கும் இடையில் உள்ள அடிப்படை வேற்றுமை அவர்கள் மேல் தட்டு மக்களின் மீது அக்கறை செலுத்துகிறார்கள் என்பதும் காங்கிரசாகிய நாங்கள் அடித்தட்டு மக்களின் துயரங்களை போக்க முயல்கிறோம் என்பதே ஆகும். உதாரணத்துக்கு கூட அவர்கள் பல துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, நானோ தொழிலகம் உள்ளிட்ட மேல் தட்டு மாநிலமான குஜராத்தை தான் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் ராகுல் காந்தி ஏழை மக்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் அளிக்கும் திட்டம் அறிவிக்கிறார்.

இந்தியாவை பொறுத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் குறைந்த பட்ச வருமானத் தேவை மாறுகிறது. இன்றைய நிலையில் அது ரூ.12000 என கூறப்படுகிறது. ஆனால் கர்நாடகா போன்ற மாநிலங்களில் ரூ. 12000 என்பது போதுமானதாக இல்லாமலும் போகலாம். சராசரியாக ரூ. 12000 வருமானம் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. அதற்காக காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.6000 அளிக்க தீர்மானித்துள்ளது.

புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் இரண்டுமே பொய்யான தகவல்கள் என எனக்கு தோன்றுகிறது. அது தவறென்று நிரூபிக்கப்பட்டால் நான் உடனடியாக மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். நான் குஜராத்தில் காந்திய கொள்கைகளுக்கு இடையில் வளர்ந்தவன். எனக்கு அகிம்சை, அன்பு மற்றும் உண்மை மட்டுமே தெரியும். என்னைப் பொறுத்தவரை ஒருவரை தாக்குவதை விட பொறுமையே அதிக பலமுள்ள ஆயுதம் ஆகும்.

மும்பை தாக்குதலின் போது பாகிஸ்தான் மீது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தாக்குதல் நடத்தாதது அந்த அரசின் விருப்பம். அவ்வளவு தான். தற்போது பாலகோட் மீது தாக்குதல் நடத்தியது இந்த அரசின் விருப்பம். அவ்வளவு தான். அரசின் எந்த ஒரு முடிவையும் நான் எதிர்ப்பவன் அல்ல. ஆனால் ஒரு தனி மனிதனாக அல்லது எனது கட்சியின் சார்பாக வேறு எண்ணங்கள் இருக்கலாம்.

நான் அகிம்சையை விரும்புபவன். என்னை பொறுத்த வரை வன்முறை எதற்கும் தீர்வு இல்லை என்பதாகும். பிரதமருக்கு என்னையும் எனது மனைவியையும் நன்கு தெரியும். நான் பாலகோட் பற்றி கேட்டதற்கு அவர் என்னிடம் பேசி இருக்கலாம். ஆனால் அவர் பேசவில்லை. ” என தெரிவித்துள்ளார்.