சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 23 நடைபெற்றது.
இவ்விழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி : ”எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.
நயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். முன்பெல்லாம் சீதாவாக நடிக்கவேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவைத் தான் தேடுவார்கள். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்”. என கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .