சென்னை:

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாராவி, நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். குறிப்பாக நடிகை நயன்தாரா குறித்து அவர் கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு திரையுலகை சேர்ந்தவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலி னும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘கொலையுதிர் காலம்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது நடிகை நயன்தாரா குறித்து பேசினார். அப்போது,  நயன்தாரா பேயாக நடிக்கிறார், சாமி வேடத்தில் நடிக்கிறார். இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேடத்தில் நடிக்க முடிகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், ராதாரவி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

அதில், நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும்  வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பு களிலிருந்தும் அவர் தற்காலிகமாக (சஸ்பென்சன்) திமுகவில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர், ஸ்டாலினும் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.