புதுடெல்லி: இந்திய உணவுக் கழகத்திற்கு(FCI) காவலாளிகளை நியமிக்கும் செயல்பாட்டில் முறைகேடு நடந்துள்ளதாக, சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அறியப்படுவதாவது; இந்திய உணவுக் கழகத்தின் டெல்லிப் பிராந்தியத்திற்கு, தகுதியான காவலாளிகளை நியமனம் செய்ய, ஏஸ் இன்டக்ரேட்டட் சொல்யூஷன் லிட்., என்ற தனியார் நிறுவனத்திடம் கடந்த 2017ம் ஆண்டு, உணவுக் கழகத்தின் சார்பில் அவுட்சோர்சிங் விடப்பட்டது.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 53 என்றிருந்த நிலையில், எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கையோ 98,771. அதில் 171 பேர் தேர்ச்சிபெற்ற நிலையில், 96 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களில், 53 பேர் வரிசைப்படுத்தப்பட்டு, 43 பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். ஆனால், பின்புலம்(background) குறித்த சோதனையின்போது, ஆவணங்கள் மற்றும் நபர்கள் தொடர்பாக நிறைய முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
பின்னர், அதை இன்னும் தீர விசாரித்தபோது, எழுத்துத்தேர்வில், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டு, வழக்கு தற்போது சிபிஐ வசம் வந்துள்ளது.
– மதுரை மாயாண்டி