வாழப்பாடி

சேலம் அருகில் உள்ள வாழப்பாடியில் கடந்த 2014 ஆம் வருடம் நடந்த ஒரு சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் ஐவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஒரு சிற்றூரில் 10 வயது சிறுமி ஒருவர் ஐந்து பேரால் கடத்தப்பட்டார். அவரை அந்த ஐவரும் கூட்டு பலாத்காரம் செய்து அதன் பின் கொன்றுள்ளனர். இந்த ஐவரும் 22 முதல் 31 வயதான இளைஞர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் இறந்த அந்தப் பெண்ணை நிர்வாணமாக்கி அந்த சிற்றூரின் கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.

அடுத்த நாள் காலை இந்த சடலத்தைக் கண்ட கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் பெண்ணின் தந்தை இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். அதை ஒட்டி பூபதி (31), சினேக் பாபு என அழைக்கப்படும் ஆனந்த பாபு (29), பாலகிருஷ்ணன் (28), பிரபாகரன், (26), மற்றும் ஆனந்தன் (22) ஆகியோர் கைது செய்யபட்டனர். இவர்கள் மீது கொலை, கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பல பிரிவுகளின் மீது வழக்கு பதியப்பட்டது.

ஆனால் காவல்துறையினருக்கு இந்த வழக்கு விசாரணை அவ்வளவு எளிதாக அமையவில்லை.

காவல்துறை துணை சூப்பிரண்ட் சூரியமூர்த்தி கடந்த 2017 ஆம் ஆண்டு வாழப்பாடி சரகத்துக்கு மாற்றப்பட்டார். அவர் இந்த வழக்கு விசாரணையில் பல குழறுபடிகள் உள்ளதை கடந்த 2018 ஆம் வருடம் கண்டுபிடித்தார். முக்கியமான பல ஆவணங்கள் விசாரணையில் சரியாக குறிப்பிடப்படாததை கண்ட அவர் அது குறித்து விசாரணையில் ஈடுபட்டார்.

சூரியமூர்த்தி சட்டக்கல்வி பயின்றவர் ஆவார். அவர் அதனால் இந்த குழறுபடிகளை கண்டறிந்து சூப்பிரண்ட் ஜார்ஜி ஜார்ஜ் இடம் தெரிவித்தார். அவர் சூரியமூர்த்தி இடம் இது குறித்து விளக்கங்கள் கேட்டறிந்தார். அத்துடன் குற்றவாளிகள் தரப்பு இந்த குழறுபடிகளை தங்களுக்கு சார்பாக வழக்கில் பயன்படுத்தியதை தெரிவித்துள்ளார்.

அதை ஒட்டி ஜார்ஜி ஜார்ஜ் இந்த வழக்கின் அரசு வழக்கறிஞரை மாற்ற பரிந்துரை செய்தார். அத்துடன் அதற்கான உத்தரவை அவர் 24 மணி நேரத்துக்குள் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றுள்ளார்.  அதன் பிறகு  புதிய அரசு வழக்கறிஞர் தனசேகரன் இந்த வழக்கில் புதிய ஆவணங்களை சேர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என மகளிர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

தீர்ப்பு வரும் நேரத்தில் காவல்துறையினர் வேண்டுமென்றே வழக்கை திசை திருப்புவதாக கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடத்துவதை  தடை செய்யக் கோரி மனு அளித்தனர். இதற்கு சூரியமூர்த்தி அளித்த பதிலை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் தற்போது குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ள்து. இது குறித்து சத்யமூர்த்தி மற்றும் ஜார்ஜி ஜார்ஜ் ஆகிய இருவரும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் தரப்பில் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தாலும் அங்கும் அவர்கள் தண்டிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.